ஆட்சியதிகாரத்தில் பங்கு தருவதில் என்ன தவறு?
காலமெல்லாம் அதிகாரப் பகிர்வு பற்றி உரக்கப் பேசிவரும் திமுக ஆட்சியதிகாரத்தில் பங்கு என்று வரும்போது மட்டும் ஏன் கொள்கை முரண்?
ஜனநாயகம் என்பது வெறும் வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமல்ல; அது அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதித்துவத்தையும் உள்ளடக்கியது. தற்போது தமிழ்நாடு அரசியலில் 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என்ற காங்கிரஸின் கோரிக்கை பேசுபொருளாகியிருக்கிறது. இதை காங்கிரஸ் வைத்த கோரிக்கை என்று மட்டும் பார்க்காமல் திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளையும் உள்ளடக்கிப் பார்க்கும்போது இந்தக் கோரிக்கை விரிவான அர்த்தம் பெறுகிறது. கூட்டாட்சி, அதிகாரப் பகிர்வு போன்றவை சார்ந்ததாக மட்டுமல்லாமல் சமூக நீதி சார்ந்ததாகவும் ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என்பதைப் பார்க்க வேண்டும்.
முரண்படும் திமுகவின் அணுகுமுறை
அதிகாரப் பகிர்வு குறித்து வலுவாகப் பேசும் திமுக, தன் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரப் பகிர்வு வழங்கத் தயங்குவது ஒரு கொள்கை முரண்பாடாகவே தோன்றுகிறது. 2006ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக தனிப்பெரும்பான்மை இல்லாத ஆட்சியை நடத்தியபோதுகூட, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமளிக்கவில்லை. ஆனால், அதே காலகட்டத்திலும் அதற்கு முன்னரும் வி.பி. சிங், வாஜ்பாய், தேவே கவுடா, ஐ.கே. குஜ்ரால், மன்மோகன் சிங் ஆகியோரது அமைச்சரவைகளில் திமுகவின் பிரதிநிதிகள் முக்கியமான துறைகளைக் கையாண்டனர். இந்தப் பின்னணியில்தான் மத்தியில் அதிகாரப் பகிர்வு சரியென்றால், மாநிலத்தில் மட்டும் அது ஏன் ஒத்துவராது என்ற கேள்வி எழுகிறது.
கூட்டாட்சித் தத்துவமும் அண்ணாவும்
மாநில சுயாட்சி குறித்து அண்ணா பேசும்போது, ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்பதையே பிரதானமாகக் கருதினார். உண்மையான கூட்டாட்சி என்பது டெல்லிக்கும் சென்னைக்கும் இடையிலான உறவு மட்டுமல்ல; அது ஒரு மாநிலத்துக்குள் இருக்கும் பல்வேறு அரசியல் சக்திகளுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வையும் உள்ளடக்கியது. அதிகாரத்தை ஒரு புள்ளியில் குவித்து வைப்பதல்ல, மாறாகப் பரவலாக்குவதே அண்ணாவின் கொள்கை ஆகும்.
விசிகவும் ஒடுக்கப்பட்டோரின் அதிகாரக் கனவும்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) போன்ற ஒரு கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவது என்பது வெறும் அமைச்சரவை மாற்றம் அல்ல; அது ஒரு வரலாற்றுத் தேவை. பல நூற்றாண்டுகளாக சாதியத்தாலும் நில உடைமைச் சமூகத்தாலும் அரசியல் அதிகாரத்தாலும் விலக்கி வைக்கப்பட்டிருக்கும் தலித் மக்களுக்கு இது ஒரு பெரும் உந்துசக்தியாக அமையும்.
விசிகவைச் சேர்ந்த ஒருவர் நிதியமைச்சராகவோ தொழிற்துறை அமைச்சராகவோ ஆனால் அது தலித் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மிகப் பெரியதாக இருக்கும். திமுகவைச் சேர்ந்த ஒருவர் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருப்பதை விட, விசிக போன்ற தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு கட்சியின் பிரதிநிதி அந்தத் துறையை நிர்வகிப்பது மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கும். ஒரு துறையைச் சார்ந்த சமூகத்தின் வலி தெரிந்தவர் அங்கு அமரும்போதுதான், திட்டங்கள் வெறும் காகிதத்தோடு நிற்காமல் அடித்தட்டு மக்களைச் சென்றடையும். அதிகாரத்தில்
இடதுசாரிகள் ஆட்சியதிகாரத்தில் பங்கு வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சமூக நீதிக்காகவும் அடித்தட்டு மக்களுக்காகவும் இடதுசாரி கட்சிகள் செலுத்திய பங்கு மிகப் பெரியது. ஆனாலும், அதிகாரம் என்பது அவர்களுக்குத் தமிழ்நாட்டில் எட்டாக்கனியாகவே உள்ளது. ஆட்சியதிகாரத்தில் இடதுசாரிகள் இடம்பெறும்போது உழைக்கும் மக்கள், அடித்தட்டு மக்களின் குரலாக அவர்கள் அதிகாரத்தில் பிரதிபலிப்பார்கள்.
சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தின் அவசியம்
இதேபோல், சிறுபான்மையினர் நலத்துறையை அக்கூட்டணியில் உள்ள ஒரு சிறுபான்மைக் கட்சியின் பிரதிநிதி வகிப்பது, அந்தச் சமூகத்தினரிடையே மிகப் பெரிய பாதுகாப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். 'தர்மகர்த்தா' முறையில் இன்னொருவர் நலன் காப்பதை விட, தங்களுக்கான அதிகாரத்தைத் தாங்களே கையாள்வதே உண்மையான ஜனநாயகம்.
அதிகாரப் பகிர்வில் இந்திய மாநிலங்களின் முன்னுதாரணம்
கூட்டாட்சியைப் பற்றி அதிகம் பேசும் மாநிலம் தமிழ்நாடு. ஆனால், ஆட்சியதிகாரப் பகிர்வைப் பொறுத்தவரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் தமிழ்நாட்டுக்கு வழிகாட்டும் நிலையில் உள்ளன. அண்டை மாநிலமான கேரளத்தில், இடதுசாரி ஜனநாயக முன்னணியில் (LDF) உள்ள சிபிஐ(எம்) மட்டுமல்லாது, சிபிஐ மற்றும் பிற சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் முக்கிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிஹாரில், நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவையில் பாஜக, எல்ஜேபி மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் அமைச்சர்களாகப் பொறுப்பு வகிக்கின்றனர்; அங்கு உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள்கூட கூட்டணிக் கட்சிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.
மஹாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), என்சிபி (அஜித் பவார்) ஆகிய கட்சிகள் அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளன. இதேபோல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) தலைமையிலான ஆட்சியில் காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகள் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து ஆகியவற்றிலும் கூட்டணிக் கட்சிகளே அமைச்சரவையை வழிநடத்துகின்றன. மத்தியில் மட்டுமல்லாது மாநிலங்களிலும் 'அதிகாரப் பகிர்வு' சாத்தியமே என்பதற்கு இம்மாநிலங்களே சாட்சியாக விளங்குகின்றன. கூட்டாட்சிக்கு எதிரானது என்று திமுகவால் குற்றம்சாட்டப்படும் பாஜகவே மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியதிகாரத்தில் பங்கு தரும்போது “ஆட்சியதிகாரத்தில் பங்கு தர மாட்டோம்” என்ற திமுகவின் நிலைப்பாட்டை கூட்டாட்சியின் வலுவான குரலான திமுக முன்வைப்பது பெரும் முரண்
உண்மையான கூட்டாட்சி என்பது அதிகாரப் பரவலாக்கலே. ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமூகங்கள் தங்களின் பிரதிநிதிகளை அமைச்சர்களாகக் காணும்போதுதான், அண்ணாவின் கனவு முழுமையடையும்!