சுழன்று வரும் தூக்கம்!
உடல்நலம், மனநலம், உடல் செயல்நிலை, உடல் உழைப்பு, சுற்றுச்சூழல், தாம்பத்திய சுகம், வயது எனப் பல காரணிகளைப் பொறுத்து தூக்கத்தின் நேரமும் தேவையும் வேறுபடும்.
சமீபத்தில் ஒரு மருத்துவப் பயனாளர் என்னிடம் சிகிச்சைக்கு வந்திருந்தார். “டாக்டர், எனக்குத் தூக்கமே வர்றதில்லே! நன்றாகத் தூங்கி மாசக் கணக்காச்சி… தூக்க மாத்திரை கொடுங்க, டாக்டர்!” என்று கேட்டார். என் அனுபவத்தில், இவரைப் போல் நிறையப் பேர் “வாரக் கணக்கில் தூங்கவில்லை, மாதக் கணக்கில் தூங்கவில்லை” என்று சொல்லி தூக்கத்துக்கு மாத்திரை கேட்டிருக்கிறார்கள்.
ஓர் உண்மையைச் சொல்லட்டுமா? மாதக் கணக்கில் யாராலும் தூங்காமல் இருக்க முடியாது. இதுதான் அந்த உண்மை. “இரவில் சரியான தூக்கம் இல்லை” என்று என்னிடம் வருபவர்களிடம், “நீங்கள் தினமும் எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள்?” என்று ஒரு பொதுவான கேள்வியை நான் கேட்பதுண்டு. இதற்குக் கிடைக்கிற பதிலோ ஆளாளுக்கு வித்தியாசப்படும். பலர் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் என்பார்கள். சிலர் மூன்று அல்லது நான்கு மணி நேரம் என்பார்கள். வயதானவர்கள் பலரும் தாமதமாகத் தூங்கி அதிகாலையில் சீக்கிரமே எழுந்துவிடுவதாகக் கூறுவார்கள்.
காரணம், நம் உடல்நலம், மனநலம், உடல் செயல்நிலை, உடல் உழைப்பு, சுற்றுச்சூழல், தூங்கும் நிலை, தாம்பத்திய சுகம், வயது எனப் பல காரணிகளைப் பொறுத்து நம் ஒவ்வொருவருக்கும் தூக்கத்தின் நேரமும் தேவையும் வேறுபடும். ஆனால், முதலில் சொன்ன பயனாளரைப்போல “மொத்த நேரமும் தூங்கவில்லை” என்று சொல்வதில் உண்மையில்லை. அப்படியானால் அவர் சொல்வது பொய்யா? பொய் இல்லை. அது ஒரு மனநிலை!
தூக்கத்துக்கு ஒரு பரிசோதனை
“எனக்குத் தூக்கமே வரவில்லை. இனிமேல் தூக்கம் வரவே வராது” என்று ஏதோ ஒரு சந்தர்ப்பச் சூழலில் அந்தப் பயனாளரின் ஆழ்மனது நம்பத் தொடங்கி இருக்கிறது. அவர் அதை உடும்புப்பிடியாகப் பிடித்துக்கொண்டார். “24 மணி நேரமும் விழித்துக்கொண்டிருக்கிறோம்” என்று அவர் திடமாக நம்பத் தொடங்கிவிட்டார். ஆனால், தன்னையும் அறியாமல் தினமும் சில மணி நேரம் அவர் ஆழ்ந்த நிலையில் தூங்குகிறார். அவரையும் அறியாது இது நடப்பதால்தான் தூங்கிய பொழுதுகளை அவரால் உணர முடியவில்லை. இதுதான் உண்மை. இதை அவருக்கு ஒரு தூக்கப் பரிசோதனை செய்து நிரூபித்த பிறகுதான் அவர் நம்பினார்.
“என்ன, தூக்கத்துக்கு ஒரு பரிசோதனையா?” – நீங்கள் வியப்புடன் விழிகளை விரிப்பது புரிகிறது. அந்த வியப்பு தரும் பரிசோதனையைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால், அந்தப் பரிசோதனையில் மருத்துவர்கள் பார்க்கும் தூக்கத்தின் நான்கு நிலைகளை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
தூக்கத்தின் நிலைகள்
நம் கண்களைத் தூக்கம் தழுவிக்கொண்டதும் அலைகள் இல்லாத ஆழ்கடலைப்போல அமைதியான, ஆழ்ந்த தூக்கத்தையே நாம் அனுபவிக்கிறோம் என்று நீங்கள் நினைத்தால், அதைக் கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள். கரைக்கு வந்து செல்கிற பலவித அலைகளைப்போல தூக்கத்திலும் பலவித அலைகள் சுழன்று வருகின்றன என்பதுதான் நிஜம்.
அப்படி வருகிற ஒவ்வொரு அலையிலும் தூக்கத்தின் வகை வேறுபடுகிறது; தூக்க நேரம் வித்தியாசப்படுகிறது. கனவுகள் வருவது, தூக்கத்தில் பேசுவது, நடப்பது போன்றவை இந்த அலைகளின் வகையைப் பொறுத்துத்தான் அமைகின்றன.
தூக்கத்தை ‘நான் ரெம்’ (Non-REM/NREM), ‘ரெம்’ (REM) எனப் பிரிக்கிறது நவீன மருத்துவம். ‘நான் ரெம்’மில் என்-1, என்-2, என்–3 என மூன்று துணை நிலைகள். ‘ரெம்’மில் ஒரு முதன்மை நிலை. ஆக மொத்தம் நான்கு நிலைகள். தூக்கத்தின்போது, சராசரியாக 90 நிமிடத்துக்கு ஒருமுறை ஒரு சுழற்சிபோல் இவை வந்து போகும். அதனால்தான் இதைத் ‘தூக்கச் சுழற்சி’ என்கிறோம்.
‘நான் ரெம்’ நிலை 1 (N1) : தூங்கச் சென்ற சில நிமிடங்களுக்குள் இது நிகழ்கிறது. சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் வரை நீடிக்கிறது. இந்த நிலையில் யாராவது நம்மை அழைத்தால் உடனே விழித்துவிடுவோம்.
‘நான் ரெம்’ நிலை 2 (N2) : உண்மையான தூக்கத்தின் முதல் கட்டம் இது. சுமார் 20 நிமிடங்கள் வரை இது நீடிக்கும். அருகில் படுத்திருக்கும் மனைவி/கணவர் வாட்சப்பில் பேசுவது கேட்காது. டிவி சத்தம், யூடியூப் சத்தம் எதையும் உணர முடியாது. காரணம், இந்த நிலையில் மூளையின் செயல்பாடு குறையும். உடலின் வெப்பநிலை குறையும். சராசரியாக, நம் ஒருநாள் தூக்கத்தில் 50% நேரத்தை இந்த நிலையில்தான் செலவிடுகிறோம்.
‘நான் ரெம்’ நிலை 3 (N3) : ஆழ்ந்த தூக்கத்துக்கு அடி எடுத்துவைக்கும் முந்தைய நிலை இது. இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசம் போன்றவை குறைவாக இருக்கிற நிலை. இந்த நிலையில்தான் உடலானது தன்னை மறுசீரமைத்துக்கொள்கிறது. திசுக்கள் புதிதாகப் பிறப்பது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது, தூக்கத்தில் பேசுவது, நடப்பது, குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது போன்றவை இந்த நிலையில்தான் நிகழ்கின்றன. மொத்தத் தூக்கத்தில் 20% நேரத்தை இதில் செலவிடுகிறோம்.
‘ரெம்’ நிலை : இதை விரைவான கண் அசைவுத் தூக்கம் என்கிறோம். தூக்கத்தின் இறுதிநிலை, ஆழ்ந்து தூங்கும் நிலை இது. முக்கியமாக, கனவுகள் வருகிற நிலை. முதல் ‘ரெம்’ நிலை 10 நிமிடங்களே நீடிக்கும். அடுத்தடுத்த ரெம் நிலைகளின் நேரம் அதிகரிக்கும். மொத்தத் தூக்கத்தில் 25% நேரத்தை இதில்தான் செலவிடுகிறோம்.