ட்ரம்ப்புக்கு கடிவாளம் போட்ட அமெரிக்க உச்ச நீதிமன்றம்

அவசரச் சட்டம் மூலம் உலக நாடுகள் மீது வரி விதிக்க ட்ரம்ப்புக்கு அதிகாரம் இல்லை... இந்தியா உட்பட பல நாடுகள் மீது ட்ரம்ப் விதித்த வரியை ரத்து செய்தது நீதிமன்றம்

Update: 2026-02-21 09:10 GMT

மிக முக்கியமான தீர்ப்பை வழங்கி இருக்கிறது அமெரிக்க உச்ச நீதிமன்றம்.

அவசரகால பொருளாதாரச் சட்டத்தைப் பயன்படுத்தி, நாடாளுமன்ற அனுமதியின்றி தன்னிச்சையாக வரி விதிக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை என்று கூறிய அமெரிக்க உச்ச நீதிமன்றம், இந்தியா, சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது ட்ரம்ப் விதித்த வரியை ரத்து செய்துள்ளது.

ட்ரம்ப்பின் எதேச்சதிகாரப் போக்குக்கு விழுந்த பலத்த அடியாகக் கருதப்படும் இந்தத் தீர்ப்பு, உலக வர்த்தகச் சூழலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகப் பொருளாதாரத்தை உலுக்கிய வரி விதிப்பு

கடந்த ஆண்டு இரண்டாவது முறையாகப் பதவியேற்றது முதலே, ட்ரம்ப் தனது 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்'  கொள்கையின் ஒரு பகுதியாக இறக்குமதி வரி என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்தார்.

இந்தியா, சீனா, கனடா, பிரேசில், மெக்சிகோ எனப் பல்வேறு நாடுகளின் மீதும் அதீத வரிகளைச் சுமத்தினார். குறிப்பாக, இந்தியப் பொருட்கள் மீது 3.5 சதவீதமாக இருந்த வரியை 50 சதவீதமாக உயர்த்தி அதிர்ச்சி கொடுத்தார்.

இந்தத் தன்னிச்சையான வரி விதிப்பால் உலக வர்த்தகம் பெரும் முடக்கத்தைச் சந்தித்தது.

நாடுகளுக்கிடையே பொருளாதாரப் பதற்றம் நிலவியதால், தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.

இத்தகைய சூழலில்தான், பல பெரு நிறுவனங்களும் வர்த்தக அமைப்புகளும் ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை நாடின.

இந்தியா எதிர்கொண்ட நெருக்கடியும் தற்காலிக ஒப்பந்தமும்

அமெரிக்கா இந்தியாவின் மிக முக்கியமான ஏற்றுமதி சந்தையாகும். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்காவுக்கான பங்கு மட்டும் சுமார் 18 சதவீதம் ஆகும்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சந்தையில், ட்ரம்ப்பின் 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் ஜவுளி, தோல் மற்றும் ரத்தினத் துறைகளின் ஏற்றுமதியை முற்றிலுமாக முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியது.

இந்த வரிச் சுமையை குறைக்க வேண்டுமென்றால், இந்தியா சில கடுமையான நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று ட்ரம்ப் நிபந்தனை விதித்தார்.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துதல், அமெரிக்கப் பொருட்களை பூஜ்ஜிய வரி விகிதத்தில் இறக்குமதி செய்தல் மற்றும் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க வேளாண், எரிசக்தி பொருட்களை வாங்குதல் ஆகியவையே அந்த நிபந்தனைகள்.

50 சதவீத வரியைச் சமாளிக்க முடியாமல் வேறு வழியின்றி இந்தியா இந்தத் தற்காலிக ஒப்பந்தத்திற்கு இணங்கியது. இதன் விளைவாக, கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

நீதிமன்றத் தீர்ப்பும் தற்போதைய குழப்பமும்

இந்த ஒப்பந்தம் வரும் மார்ச் மாதம் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாகவிருந்த நிலையில், தற்போது நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இந்தத் தீர்ப்பின்படி, ட்ரம்ப் விதித்த கூடுதல் வரி விதிப்பு செல்லாததாகி, இந்தியாவின் வரி விகிதம் பழைய 3.5 சதவீத நிலைக்கே திரும்ப வேண்டும்.

ஆனால், நீதிமன்றத் தீர்ப்பால் கோபமடைந்த ட்ரம்ப், உடனடியாகப் பிரிவு 122ஐப் பயன்படுத்தி அனைத்து நாடுகள் மீதும் 10 சதவீத வரி விதிப்பதாக மீண்டும் அறிவித்துள்ளார். அதேசமயம், "இந்தியாவுடனான இடைக்கால ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை; இந்தியா 18 சதவீத வரியைத் தொடர்ந்து செலுத்தும்" என்று பிடிவாதம் காட்டுகிறார்.

 வலுவடைந்த பேரம் பேசும் வாய்ப்பு

அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்தியாவுக்குச் சாதகமான ஒரு பேராயுதமாக மாறியுள்ளது.

ட்ரம்ப் விதித்துள்ள புதிய 10 சதவீத வரியைக் கணக்கிட்டாலும், இந்தியப் பொருட்கள் மீதான வரி 13.5 சதவீத (3.5% + 10%) அளவிலேயே இருக்க வேண்டும் என்பது பொருளாதார நிபுணர்களின் கணிப்பு.

எனவே, அமெரிக்காவின் முந்தைய கடினமான நிபந்தனைகளை அப்படியே ஏற்க வேண்டிய அவசியம் இனி இந்தியாவுக்கு இல்லை என்கின்றனர். வரும் வாரம் வாஷிங்டன் செல்லவுள்ள இந்திய அதிகாரிகள் குழு, இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்தி வரி விகிதத்தை மேலும் குறைக்கவும், நிபந்தனைகளைத் தளர்த்தவும் வலுவாகப் பேரம் பேசும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும் கூறுகின்றனர்.

மொத்தத்தில், உலகப் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைத்துவந்த ட்ரம்ப்பின் பிடிவாதமான செயல்பாடுகளுக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒரு வலுவான கடிவாளம் போட்டுள்ளது.

Tags:    

Similar News