இந்தியா - சீனா: ஓர் ஒப்பீடு

Update: 2026-01-02 05:47 GMT

 வேளாண் கல்லூரியில் படிக்கும்போதுதான், சீனா தொடர்பான சில அறிவியல் தகவல்களை 1980களில் முதன்முதலாக நான் கேள்விப்பட்டேன். அதற்கு முன்பு, சீனா என்பது நமது எதிரி, 1962ஆம் ஆண்டு போரில் அவர்களிடம் தோற்றுப் போனோம் என்பது போன்ற சாதாரணத் தகவல்கள்தாம் என்னிடம் இருந்தன. குருவிகள் தானியங்களைத் தின்கின்றன. எனவே, நாடு முழுவதும் உள்ள குருவிகளை அழிக்க வேண்டும் என்னும் ஒரு முட்டாள்தனமான முன்னெடுப்பின் வழியே சீனாவில் உருவான செயற்கைப் பஞ்சத்தால் கோடிக்கணக்கில் சீனர்கள் பஞ்சத்தில் மடிந்ததைப் படித்திருந்தேன். சீனா  அறிவியல், தொழில்நுட்பத்தில் முன்னேறிக்கொண்டிருந்த நாடு என்னும் பிம்பம் அப்போது இல்லை.

ஆனால், வேளாண் கல்லூரியில் படிக்கும் காலத்தில், சீனா, கலப்பு நெல் (Hybrid Paddy) சாகுபடியில் பெரும் சாதனைகளைப் படைத்துவிட்டது. பல மில்லியன் ஹெக்டர்களில் அது சாகுபடி செய்யப்படுகிறது. நாம் இங்கே பயிரிடும் வீரிய ரகங்களை விட 80% அதிக மகசூல் என்றெல்லாம் முதன்முதலாகக் கேள்விப்பட்டேன். நாம் ஏன் இங்கே கலப்பு நெல் சாகுபடியில் ஈடுபடுவதில்லை என்னும் கேள்விக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை. நெல்லில் கலப்பினத்தை உருவாக்குவது மிகக் கடினம். அந்தச் சாதனையை நேரில் கண்ட ஆசிரியர்கள் எங்கள் கல்லூரியில் அப்போது இல்லை. அது ஒரு மூடிய சமூகம், அங்கிருந்து வரும் தகவல்கள் நம்பத் தகுந்தவையாக இல்லை என்று ஒரு பேராசிரியரின் குரல் சொன்னது. அதன் பின்னர், பல ஆண்டுகள், சீனா தொடர்பான செய்திகள் வரும்போதெல்லாம், அவற்றைக் குறைத்து மதிப்பிட முந்தைய வாக்கியமே போதுமானதாக இருந்தது.

2004 ஆம் ஆண்டு நான் சென்னையில் கவின்கேர் நிறுவனத்தில் கொள்முதல் துறையில் பணியில் சேர்ந்தேன். எங்கள் ஷாம்புவுக்கான முக்கியமான கச்சாப் பொருள் அமெரிக்காவில் இருந்தது இறக்குமதி செய்யப்பட்டுவந்தது. அமெரிக்க நிதிச் சிக்கல் காரணமாகவும், மடமடவென விலையுயர்ந்த கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும், அந்தக் கச்சாப் பொருளின் விலை மிக வேகமாக உயர்ந்தது.

வேறு எந்த நாட்டில் இருந்தாவது குறைந்த விலையில் இறக்குமதி செய்ய முடியுமா என யோசித்தபோது, சீனாதான் நினைவுக்கு வந்தது. 18 நாட்கள் சீனா செல்ல ஒரு திட்டம் வகுத்தோம். அதில் முதல் வாரம் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்திருந்த சல்ஃபனேஷன் தொழிற்சாலை. சல்ஃபனேஷன் என்பது கச்சாப் பொருள் உருவாக்கத்தில் முக்கிய வேதிமாற்றம். முதலில், அந்தத் தொழிற்சாலை அமைந்திருந்த தொழிற்பேட்டைக்கு அழைத்துச் சென்றார்கள். தொழிற்பேட்டையின் மத்தியில் கந்தகம் (சல்ஃபர்) தயாரிக்கும் தொழிற்சாலை. அதைச் சுற்றிலும் கந்தகத்தைக் கச்சாப் பொருளாகப் பயன்படுத்தும் அடுத்த நிலை தொழிற்சாலைகள். கந்தகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து கந்தகம், குழாய்கள் வழியே அந்தத் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும். செயல் திறன் மிகுந்த தொழிற்சூழல். அதன் பிரம்மாண்டம் இன்னும் கண்களிலேயே நிற்கிறது. ஆனாலும், அந்தக் கச்சாப் பொருளின், அடிப்படை அங்கமான ஆல்ஃபா ஓலிஃபீன் சீனாவில் அப்போது உற்பத்தியாகவில்லை என்பதால், சீனாவின் உற்பத்தி விலை அதிகமாக இருந்தது.

அடுத்து எங்கள் நிறுவனத்துக்கான வாசனை திரவியங்களையும், அழகுப் பொருட்களையும் கொள்முதல் செய்வதற்காக குவாங்ஸூ நகருக்குப் பயணித்தோம். நாங்கள் சென்ற பல தொழிற்சாலைகளின் வடிவமைப்பும் உற்பத்திமுறைகளும் எங்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை. எங்கள் தொழிற்சாலைகளின் அளவு கூட இல்லை. ஆனால், அவர்களின் உற்பத்தி விலை குறைவு. அந்த நிறுவனங்களில் சில, நுகர்பொருட்களை உற்பத்தி செய்பவையாக இருந்தன. அங்கிருந்த நுகர்பொருட்கள் பலவும் பன்னாட்டு நுகர்பொருள் சின்னங்களை நகல் செய்திருந்தன.

குவாங்ஸுவில் இருந்த இந்திய வணிகத் தொடர்பாளர் ஒருவரைச் சந்தித்து, சீன உற்பத்தியின் கூறுகளைப் புரிந்துகொள்ள முயற்சித்தோம். உற்பத்தியில் மிக முக்கியமான கூறுகள் இரண்டு. 1. மின்சாரம் 2. குறைந்தபட்சக் கூலி. இதில் மின்கட்டணத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆனால், குறைந்தபட்சக் கூலி இந்தியாவை விட கிட்டத்தட்ட 1.5 மடங்கு அதிகமாக இருந்தது ஆச்சரியத்தை அளித்தது. பின்னே எப்படி சீன உற்பத்தியாளர்களால், குறைந்த விலைக்குப் பொருட்களை உற்பத்தி செய்ய முடிகிறது என்று கேட்டேன். இவையெல்லாம் நடைமுறையில் அப்படியே கடைபிடிக்கப்படுவதில்லை. இங்கே பணி 12 மணிநேரம். சில காலங்களில், வாரத்தின் ஏழு நாட்களிலும் உழைக்க வேண்டியிருக்கும். மேலும், உள்ளூர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதி ஒருவர் நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பார். தொழிற்சாலையின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அரசுடன் இணைந்து உதவி செய்வார் என்றார்கள். புரிந்ததுபோல் இருந்தது. ஆனாலும் முழுமையாகப் புரியவில்லை.

சீனாவில் இருந்து வேதிப்பொருட்களை இறக்குமதி செய்யும் சில தமிழக நிறுவனங்கள், தங்களது தரக்கட்டுப்பாட்டுப் பிரதிநிதிகளை சீனாவிலேயே பணியமர்த்தியிருந்தார்கள். வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில், தரக் கட்டுப்பாட்டுச் சோதனைகளைச் செய்த பின்னர், தங்கள் கண் முன்னே கண்டெயினரில் பொருட்களை ஏற்றி கண்டெயினர்களை சீல் செய்து அனுப்புவார்கள். சீனத்தில் பணிபுரிந்த என் இந்திய நண்பர்கள் பலர் இதை விரிவாகவும் எச்சரிக்கையாகவும் சொன்னார்கள்.

மொத்தத்தில், இந்தியாவில் பணிபுரிந்த 25 ஆண்டுகளில், சீனா என்பது மிக மலிவான பொருட்களை, குறைந்த விலையில் உற்பத்தி செய்து அனுப்பும் நாடு. தரம் என்னும் அலகில், சீன உற்பத்தியாளர்களை முழுவதும் நம்பிவிடக் கூடாது என்பதே என் புரிதலாக இருந்தது.

பணிமாற்றம்

2015ஆம் ஆண்டு, எனக்கு தான்சானியாவில், நுகர்பொருள் நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறுப்பில் அமரும் வாய்ப்பு வந்தது. இந்த நிறுவனம், நுகர்பொருள் உற்பத்தியோடு, இந்தப் பொருட்களை அடைக்கும் நெகிழிக் குப்பிகளையும் மூடிகளையும் தயாரித்துவந்தது. ஆப்பிரிக்காவில் தரமான நெகிழிக் குப்பிகளைத் தயாரித்து அளிக்கும் நிறுவனங்கள் இல்லை என்பதால், இதுதான் இங்கு தொழில் மாடல்.

நெகிழிக் குப்பிகளை உற்பத்தி செய்ய, உயர் தொழில்நுட்ப அச்சுகளும், இயந்திரங்களும் தேவை. இவை பெரும்பாலும் சீனாவில் இருந்தே வாங்கப்பட்டு வந்தன. (கொஞ்சம் தைவானில் இருந்தும்). சீனா என்றால் மலிவான தரமாக இருக்குமே என சந்தேகப்பட்டு ஆராயத் தொடங்கினேன். ஒரே உயர் தரமுள்ள அச்சுகளுக்கும் இயந்திரங்களுக்கும் இந்தியாவிலும் சீனாவிலும் உள்ள தயாரிப்பாளர்களை அணுகி விலைகளை வாங்கி ஒப்பிட்டபோது, எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. சீன உற்பத்தியாளர்களின் விலை இந்தியாவை விட 20-25% வரை குறைவாக இருந்தது. இந்தக் கொள்முதலைக் கவனித்துக்கொள்ளவென்றே ஒரு தனி இந்தியப் பொறியியல் மேலாளர் இருந்தார். ஐரோப்பாவின் இயந்திரங்களின் விலைகளை ஒப்பிடவே வேண்டாம். உலகில் மிக அதிக விலை கொண்ட இயந்திரங்கள் அவை. சில மாதங்களில், சீனா தொடர்பான எனது பார்வை முழுவதுமாக மாறியது.

கடந்த ஆண்டு இயந்திரங்கள் வாங்க, 16 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவின் குவாங்ஸூ நகரத்துக்கு மீண்டும் சென்றேன். குவாங்க்ஸூ நகரம் முற்றிலும் வேறான, அதிநவீன நகரமாக உருமாறியிருந்தது. தங்கியிருந்த வணிக விடுதியில் நாய்க்குட்டிகள் போல அங்குமிங்கும் அலைந்து திரிந்துகொண்டிருந்த ரோபோக்கள் எனக்கு ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களை நினைவுறுத்தின

நாங்கள் சென்றது கிரீம்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் வாங்க. ஆனால், அவர்களின் தொழிற்சாலையில், கிரீம்களை ட்யூப்களில் அடைக்கும் இயந்திரங்களும் இருந்தன.

எங்கள் நிறுவனத்தில் பற்பசையை ட்யூப்களில் அடைக்கும் இயந்திரங்கள் உள்ளன. ஒரு நிமிடத்துக்கு 300 ட்யூப்களை அடைக்க வல்லவை. அவ்வளவு செயல்திறன் வாய்ந்த இயந்திரங்கள் இருக்கின்றனவா என்று கேட்டேன். இல்லை எனச் சொன்ன நிறுவன உரிமையாளர், எங்களிடம் நிமிடத்துக்கு 60 ட்யூப்களை அடைக்கும் இயந்திரம் உள்ளது என்றார். அதே மூச்சில், ‘அதன் விலை 30 ஆயிரம் டாலர்கள் என்றார்’. (அவருக்கு இந்தியர்களின் உளவியல் நன்கு அத்துபடி) என் மூச்சு நின்றுவிட்டது. ஸ்வீடனில் இருந்தும், ஜெர்மனியில் இருந்தும் பல ஆண்டுகள் முன்பு நாங்கள் கொள்முதல் செய்த இயந்திரங்களின் விலை 1.5 மில்லியன் முதல் 2.5 மில்லியன் டாலர் வரை. எங்களிடம் இருக்கும் ஒரு இயந்திரத்தின் கொள்ளளவைச் சமன்செய்ய நாங்கள் 5 சீன இயந்திரங்கள் வாங்க வேண்டியிருக்கும். அப்படி வாங்கினாலும், எங்களுக்கு ஆகும் செலவு 1.5 லட்சம் டாலர்கள்தான். பத்தில் ஒரு பங்கு. இதுதான் சீனாவின் செயல்திறன்.

இந்தியாவும் சீனாவும்!

இந்தியா விடுதலை பெற்ற இரண்டாண்டுகளுக்குப் பிறகு, சீனத்தில், மா சே துங் தலைமையில், மக்கள் சீனா மலர்ந்தது, 1950களில், இரு தேசங்களுமே வறுமையான தேசங்கள்தாம். விடுதலை பெற்ற இந்தியா, உணவுக்காக உலக நாடுகளில் இருந்து வரும் இறக்குமதியை நம்பியிருந்தது. 90% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்தனர். தொழிற்துறை என்றொரு துறையே இருந்ததில்லையோ என்னும் அளவுக்கு நசிந்திருந்தது.

முதல் 30 ஆண்டுகளில், இந்தியா உணவுத் தன்னிறைவை அடைந்தது. ஓரளவு வளர்ந்த தேசமாக இருந்த போதிலும், உற்பத்தித் துறை கட்டுப்பாடுகள் என்னும் இறுகிய தொழில் கொள்கைகள் 1980 கள் வரை, இந்தியத் தொழில்துறையை வளரவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தது., இதே காலத்தில், சீனா தன் தொழில் கொள்கைகளைத் தளர்த்தி, உலக நாடுகளின் முதலீடுகளை ஈர்க்கத் தொடங்கியிருந்தது

90களில், இந்தியா பெரும் அந்நியச் செலாவணிச் சிக்கலை நோக்கிச் சென்றது. அந்தச் சிக்கலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களை பிரதமர் நரசிம்மராவ் கொண்டு வந்தார். 1991ஆம் ஆண்டு இந்தியப் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடங்கியபோது, இந்தியாவின் தனிநபர் வருமானம் என்னும் பொருளாதார அலகில், இந்தியா (370 டாலர்) , சீனாவைவிட (350 டாலர்) முன்னேதான் இருந்தது. 10-12 ஆண்டுகள் முன்பே பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்திருந்தாலும், 90கள் வரையில், இந்தியாவும் சீனாவும் ஒரே பொருளாதார வளர்ச்சி வேகத்தில்தான் இருந்தன. ஆனால், அடுத்த 25 ஆண்டுகள், சீனா சராசரியாக 9.5% என வளர, இந்தியாவின் வளர்ச்சி வேகம் 6.5% என்று பின்தங்கிப் போனது. சீனா 60களின் அடிப்படைக் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் செய்த முதலீட்டின் வெளிப்பாடுகள், சீனப் பொருளாதாரத்தின் வேகவளர்ச்சிக்கான எரிபொருளாக இருந்தது என்கிறார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்திய சென். இந்தியா, இன்றுமே சீனா 90களில் அடைந்த கல்வியறிவை எட்டவில்லை.

சீனா அத்துடன் நின்றுவிட வில்லை. 90களின் மத்தியில், சீனா உயர் தொழில்நுட்பம், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வித்தளங்களில் பெருமளவு முதலீடுகளைச் செய்யத் தொடங்கியது. 1995ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 211 திட்டம் நூறு பல்கலைக்கழகங்களை மேம்படுத்தி, அதன் கட்டமைப்புகளை, ஆராய்ச்சித் திட்டங்களை வலுவாக்கியது. 1998ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 985 திட்டம் சில பல்கலைக்கழகங்களை உலகளாவிய தரத்துக்கு உயர்த்த முடிவெடுத்தது. ட்சிங்வா பல்கலைக்கழகம், பீஜிங் பல்கலைக்கழகம் போன்ற கல்விநிலையங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டது. இன்று பீஜீங் பல்கலைக்கழகம் உலகளவில் 14 ஆவது இடத்திலும், ட்சிங்வா பல்கலைக்கழகம் உலகளவில் 17 ஆவது இடத்திலும் உள்ளன. உலகின் உயர் 100 பல்கலைக்கழகங்களில், 15 சீனாவில் உள்ளன.

இன்று உலக அளவில், 49% காப்புரிமைகள் (Patents), சீனத்தில் பதிவாகின்றன. உலக அளவில் மிக அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் சீனாவில் இருந்து வெளியாகின்றன. மருத்துவம், செயற்கை நுண்ணறிவு போன்ற தளங்களில், ஆய்வுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. உலகின் மிகச் சிறந்த மருத்துவ ஆய்வுக் கூடங்கள் இன்று சீனாவில் உள்ளன. ஆராய்ச்சி வெளிப்பாடுகள் என்னும் அலகில், சீனா  உலகத்தின் முதன்மை நாடு. இவையனைத்தும் 90களின் மத்தியில் சீனா செய்த முதலீடுகளின் விளைவுகள்.

இந்தியா, இது போன்ற முன்னெடுப்புகளை, 2004ஆம் ஆண்டில்தான் செய்தது. சென்னை ஐஐடி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் போன்ற உயர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 100 கோடி ரூபாயை ஒரு முறை முதலீடாக ஒதுக்கியது. ஆனால், அதன் விளைவுகள் பெரிதாக வரவில்லை. காப்புரிமைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்னும் உயர் தளங்களில், சீனாவுடன் ஒப்பிடவே முடியாத பின்தங்கிப்போன நாடாக இருக்கிறோம். உலகின் உயர் 100 கல்வி நிறுவனங்களில் எந்த இந்தியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் இல்லை நம்மைப் பொறுத்தவரை, நமது முதலீடுகள் தாமதமாகவும், பெரிதாகப் பயன் தராமலும் போய்விட்டன.

விண்வெளித் துறையில் சீனா தன் முதலீடுகளை 1950களில் தொடங்கி, முதல் செயற்கைக் கோளை 1970இல் ஏவியது. 1960களில் முதலீடு செய்யத் தொடங்கிய இந்தியா, 1980ஆம் ஆண்டு தனது செயற்கைக் கோளை ஏவியது.

விண்வெளித் துறையில் சீனா மிகப் பெரும் முதலீடுகளைச் செய்து பெரும் பாய்ச்சல்களை உருவாக்கினாலும், இந்தியாவும் சீனாவுக்குக் கொஞ்சமும் சளைக்கவில்லை. மிகக் குறைந்த செலவில் விண்வெளிக்கு ஏவும் ராக்கெட்களையும் செயற்கைக் கோள்களையும் இந்தியா தொடர்ந்து உருவாக்கிவருகிறது. ஆனால், சீனா, அதிக முதலீட்டின் பயனாக, விண்வெளிக்கு மனிதரை அனுப்புவது போன்ற பாய்ச்சல்களைச் செய்துள்ளது.

ராணுவத் தளவாட உற்பத்தியில், இந்தியா, சீனா என்னும் இரு நாடுகளுமே விடுதலை பெற்ற 50 ஆண்டுகள்வரை ரஷ்யாவைச் சார்ந்திருந்தன. ஆனால், கடந்த 25 ஆண்டுகளில், சீனா, உள்நாட்டிலேயெ ரஷ்ய / ஐரோப்பிய தொழில்நுட்பத்தை விட மேம்பட்ட போர் விமானங்களை உருவாக்க முயன்று அதில் வெற்றி பெற்றுவிட்டது. இந்தியா இன்னும் போர் விமானங்களுக்காக ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாடுகளை நம்பியிருக்கிறது.

உலகில் எந்தத் துறையிலும் முதலில் இறங்குபவருக்கு ஒரு சாதகம் இருக்கும். ’First mover advantage ’என்பார்கள் அதை. 1990களில் இந்தியாவுக்கு மென்பொருள் துறையில் அது இருந்தது. அத்துறைக்கு, மேற்கத்திய நிறுவனங்கள் செய்யும் செலவை விட மிகக் குறைந்த செலவில், இந்திய நிறுவனங்கள் அதே சேவையைச் செய்துகொடுக்கும் ஒரு தொழில் மாதிரியை வெற்றிகரமாக உருவாக்கினார்கள். டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்.சி.எல் எனப் பெரும் இந்திய வணிக சாம்ராஜ்யங்கள் எழுந்தன.

இந்த இந்தியப் பன்னாட்டு நிறுவனங்கள் இந்த சேவைப் பாதையில் இருந்து பெரிதாக மாறாமல், தொடர்ந்து 35 ஆண்டுகளாக அதே பாதையில் செல்கின்றன. ஆனால், மேற்கத்தியத் தொழில் முனைவோர் இந்தப் பாதையில் புத்தாக்கத் தொழில்களை உருவாக்கத் தொடங்கினார்கள். ஈ.ஆர்.பி, கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் எனப் புதிய சாம்ராஜ்யங்கள் எழுந்தன. இதன் அடுத்த பாய்ச்சல்தான்Artificial Intelligence என்னும் செயற்கை நுண்ணறிவு.

பல காலம், மென்பொருள் துறையில் இந்தியாதான் முன்ணணியில் இருக்கிறது. இந்தியாவில் ஆங்கிலம் பேசும் தொழில்நுட்பர்கள் இருப்பது பெரும் சாதகம் எனச் சொல்லிவந்தோம். சீனர்கள் ஆங்கிலத்தை கற்பதில் பின்தங்கியுள்ளார்கள். எனவே, இத்துறையில் இந்தியா இன்னும் பல காலம் ஆட்சி செய்யும் என மெத்தனமாக இருந்தோம்.

மென்பொருள் துறையில் சீனாவின் பாய்ச்சல்!

அண்மையில், செயற்கை நுண்ணறிவுத் துறையில் Chat Gpt என்னும் ஒரு புதிய தொழில் முனைப்பை அமெரிக்கர்கள் உருவாக்கி சந்தைக்குக் கொண்டுவந்தனர். அதற்கு 10 பில்லியன் டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ. ௯௦,000 ஆயிரம் கோடி) முதலீடு தேவைப்பட்டது எனச் சொல்லப்பட்டது. இது சந்தைக்கு வந்த ஒரு ஆண்டுக்குள்ளாகவே Deep Seek என்னும் செயற்கை நுண்ணறிவு சந்தைக்கு வந்துவிட்டது. இது சீனாவில் இருந்து வந்தது என்பதுதான் இதில் முக்கியம். அதைவிட முக்கியம், இதன் முதலீடு 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.௪,500 கோடி) மட்டுமே.

இதை நமது மென்பொருள் சாம்ராஜ்யங்களில் ஒன்றோ அல்லது 3-4 நிறுவனங்கள் இணைந்தோ செய்திருக்க முடியாதா என்னும் கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. ஊழியர்கள் வாரம் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்னும் நாரயணமூர்த்தி போன்ற Labour Contractor மனநிலை கொண்ட இந்தியத் தொழில் முனைவோர்களால், இது சாத்தியமேயில்லை என்றுதான் தோன்றுகிறது.

மரபுசாரா சக்தி

1980களில் கச்சா எண்ணெய் விலையுயர்வுக்குப் பின்னால், உலகிலேயே முதல்முறையாக, புதிய, மரபுசாரா சக்தி துறை, என ஒரு புதிய அமைச்சரவையை உருவாக்கியது இந்தியா. அது சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை, இயற்கை எரிவாயு போன்ற தளங்களில் செயல்படத் தொடங்கியது.

சீனா தனது மரபுசாரா சக்தி உற்பத்தியை முன்பே தொடங்கியிருந்தாலும், இரண்டு நாடுகளுமே கடந்த 20-25 ஆண்டுகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இந்தத் துறையில் உலகின் மிகப் பெரும் உற்பத்தியாளராக நிற்பது சீனாதான். இன்று சீனா 880 கிகா வாட் சூரிய ஒளி மின்சாரத்தையும், 520 கிகாவாட் காற்றாலை மின்சாரத்தையும் உற்பத்தி செய்கிறது. இந்தியா 97 கிகா வாட் சூரிய ஒளி மின்சாரத்தையும், 48 கிகா வாட் காற்றாலை மின்சாரத்தையும் உற்பத்தி செய்கிறது. இதில் இன்னொரு முக்கிய அம்சம், உலகின் 80% சூரிய ஒளி மின்தகடுகளை உற்பத்தி செய்து, உலகின் மிகப் பெரும் ஏற்றுமதியாளராக இருப்பது சீனாதான்.

இந்திய - சீன வணிகம்!

1988 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சீனாவுக்குப் பயணம் செய்தார். அப்போது ஏற்பட்ட ஒப்பந்தங்களின் விளைவாக, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடங்கிய வணிக உறவு, இன்று பெருமளவு வளர்ந்திருக்கிறது. இன்று இந்தியா உலக அளவில் அடிப்படை அல்லோபதி மருந்து (Generic Medicine) உற்பத்தியிலும், இரு சக்கர மோட்டார் வாகன உற்பத்தியிலும் முன்ணணியில் இருக்கிறது. இந்த இரண்டு தொழில்களுக்குமான அடிப்படைக் கச்சாப் பொருட்களுக்கு இந்தியா சீனாவையே பெருமளவு நம்பியிருக்கிறது. இது தவிர இயந்திரங்கள், மின்ணணு சாதனங்கள் போன்றவை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியா மென்பொருள் சேவை, கனிமங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்கிறது. 2024-25ஆம் ஆண்டில், இந்தியா சீனாவிலிருந்து ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு இறக்குமதி செய்திருக்கிறது. சீனா இந்தியாவில் இருந்தது ரூ.1.3 லட்சம் கோடி இறக்குமதி செய்திருக்கிறது.

வேக வளர்ச்சிக்கு ஜனநாயகம் ஒரு தடையா?

சீனாவின் வெற்றிகளைப் பேசும் போதெல்லாம், அது அடக்குமுறை ஆட்சி உள்ள நாடு. அப்படி ஒரு அரசு நிர்வாகம் இருந்தால்தான் அது போன்ற வெற்றிகள் சாத்தியம் என்னும் ஒரு பொதுக் கருத்து உலவுகிறது. ரகுராம் ராஜன் போன்ற புகழ்பெற்ற பொருளாதார அறிஞர்களே இப்படியான கருத்தைப் பொதுவெளிகளில் பேசும் போது, மற்றவர்களைக் கேட்கவே வேண்டாம்.

உலகின் பல நாடுகளில், ஜனநாயகமும் மக்கள்நல அரசாட்சி முறையையும் கொண்டுள்ள நாடுகள் சீனாவைவிட மேலான மனித மேம்பாடுகளையும் நிலையான அரசமைப்பையும் கொடுத்திருக்கின்றன. உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தியாளராக இந்தியா உருவானது, கூட்டுறவு என்னும் ஜனநாயகத் தொழில்முறை வழியேதான்.

ஜனநாயகம் என்பது உணவு, சுகாதாரம் போல, மனிதர்களின் அடிப்படை உரிமை. அதைக் காவுகொடுத்து, இந்தியா பெரும் பொருளாதாரமாக வேண்டும் என நினைப்பது கண்களை விற்று சித்திரம் வாங்குவது போல. அடக்குமுறை அரசாட்சி இருந்தால்தான் நாம் உயர் வளர்ச்சியை அடைய முடியும் என்பது ஜனநாயகத்தின் மீது, சமத்துவத்தின் மீது நம்பிக்கையில்லாத பலவீனர்களின் வாதம் மட்டுமே

சீன வெற்றியின் மையம் என்ன?

சீனாவின் வெற்றியின் மையப்புள்ளி என்னவென்றால், பெரும்பாலான உயர் தொழில்நுட்பங்களை, உற்பத்தி நிலையங்களை எந்த நாடும் உருவாக்க இயலாத அளவில் மிகக் குறைந்த முதலீட்டில் உருவாக்கிவிடும் செயல் திறன் கொண்ட நாடாக உருவெடுத்திருப்பதுதான். அதன் பின்னே இருப்பது உலகின் உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளின் வளர் நுனியில் சீனம் செய்த முதலீடுகள்.

இந்தியாவுக்கான படிப்பினைகள்

சீனாவின் உலகளாவிய வெற்றிகளில், இந்தியாவுக்கான படிப்பினைகள் உள்ளன. உலகின் மிக வறுமையான நாடாக, உணவுத் தன்னிறைவே முக்கியம் என இருந்த காலத்தில், கூடுதலாக தொழில்மயமாக்கம், உயர்கல்வி, விண்வெளி, அணுசக்தி என்னும் துறைகளில் முதலீடு செய்தோம். பின்னர் 80/90களில், தொழில்நுட்பம், நிதிச் சீர்திருத்தம் என்னும் இலக்குகளை உருவாக்கி மேம்படுத்தினோம். அவற்றின் மொத்த விளைவே இன்றைய இந்தியா.

ஆனால், விடுதலை பெற்ற முதல் 50 ஆண்டுகளில், அடிப்படைக் கல்வி, சுகாதாரம் போன்ற மனிதவளத் தளங்களில் முழுமையாக முதலீடு செய்வதில் தவறிவிட்டோம். 1960களில் தொடங்கி, அடிப்படைக் கல்வி மற்றும் சுகாதாரத்தில் சீனா முதலீடு செய்தது.

அடுத்த 30 ஆண்டுகளில், அடுத்த நிலை அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்பம், மக்கள்நல மேம்பாடு போன்ற தளங்களில் நாம் உயர் இலக்குகளை நிர்ணயித்து, முதலீடுகள் செய்வதிலும் சுணங்கிவிட்டோம்.

இனியும் தாமதிப்பது, இந்தியாவின் வளர்ச்சியைத்தான் பாதிக்கும்.

இன்றைய இந்தியா – எங்கே செல்லும் இந்தப் பாதை?

கெடுவாய்ப்பாக, இன்றைய அரசியல் தலைமை, அறிவியல், தொழில்நுட்பங்களில், மக்கள்நல மேம்பாட்டில் பெரும் முதலீடுகள் என்னும் பாதையில் இருந்து விலகி, ஒட்டுண்ணிப் பொருளாதாரம், மத அடிப்படைவாதம் என்னும் பிற்போக்கு இலக்குகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

கோமியம் மருத்துவக் குணம் கொண்டது. அசைவம் உண்பதால் நிலநடுக்கம் வருகிறது என நம் உயர் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களின் தலைவர்கள் பேசும் பேச்சுக்கள், உலகளாவிய அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சித் தளங்களில் இந்தியா முதன்மை இடங்களைப் பிடிக்கும் என்னும் நம்பிக்கையைத் தருவனவாக இல்லை.

விடுதலை பெற்ற காலத்தில், உலகின் ஏழை நாடுகளுள் ஒன்றாக இந்தியா இருந்த போது, பிரதமர் நேரு, ’ஐஐடி, எய்ம்ஸ், உயர் தொழில்நுட்பம், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், அணுசக்தி, விண்வெளி எனப் பரந்துபட்ட துறைகளில் முதலீடு செய்து, அவற்றை வளர்த்தெடுக்கும் நிறுவனங்களை உருவாக்கினார். அந்த நிறுவனங்களை, ‘நவீன இந்தியாவின் கோயில்கள்’, என வர்ணித்து, சமூகத்தின் செல்திசையை எதிர்கால நோக்கோடு தீர்மானித்தார்.

ஆனால், இன்றைய அரசியல் தலைமை, பண்டைக் காலத்திலேயே இந்தியாவில் எல்லாத் தொழில்நுட்பங்களும், அறிவியல் முன்னேற்றங்களும் இருந்தன எனப் பழங்காலத்தை நோக்கி இந்தியாவைச் செலுத்திக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் போர் விமானங்களை உருவாக்குவதை விட்டுவிட்டு, பிரான்ஸில் தயாரான போர் விமானங்களுக்கு திருஷ்டி படாமல் இருக்க எலுமிச்சம் பழங்களைக் கட்டிக்கொண்டிருக்கிறார் நமது ராணுவ அமைச்சர்.

இன்றைய ஒன்றிய அரசியல் தலைமையைப் பின்னின்று இயக்கும் ஜனநாயகமற்ற ஒரு மத அடிப்படைவாத நிறுவனத்தின் ஆக்டோபஸ் போன்ற கிளைகள், நவீன இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை மாற்றி, பழங்காலத்திய மனுதர்மத்தை அடிப்படையாகக் கொண்ட பிற்போக்கு அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவோம் எனச் சூளுரைத்துக்கொண்டிருக்கின்றன.

அனைவருக்குமான அடிப்படைக் கல்வி, சுகாதாரம், உயர் அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி போன்ற தளங்களில் முதலீடுகள் செய்து மேம்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், தென்கொரியா, சீனா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள், இந்தியா எனக் குறைந்தது 20-25 உதாரணங்களைச் சொல்லலாம். அவற்றின் மேம்பாட்டின் வழியே உருவான தொழில்நுட்பங்கள் உலகளாவிய மனித வாழ்வை மேம்படுத்தியுள்ளன.

ஆனால், மத அடிப்படைவாதத்தை முன்னெடுத்து, அதன் வழியே மேம்பட்ட நாடுகள் உலகில் ஒன்று கூட இல்லை. அவை பிற்போக்கான, பெண்ணடிமைச் சமூகங்களாக மாறி, இறுகிப் பின்தங்கிப் போயுள்ளன. பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் எனக் கண் முன்னே உள்ள உதாரணங்களைச் சொல்லலாம்.

30-35 ஆண்டுகளுக்கு முன்பு, பன்னாட்டு அரங்குகளில், இந்திய யானையும், சீன ட்ராகனும் என ஒப்பீடுகள் எழுதப்பட்டன. இன்று எவருமே அப்படி ஒப்பீடு செய்து பேசுவதும் எழுதுவதும் இல்லை. ட்ராகன் பல பத்தாண்டுகள், முன்னே சென்று, உலகின் வல்லரசாக மாறிவிட்டது என்பது கசப்பான உண்மை.

Tags:    

Similar News